×

பண்டிகை நாட்கள், விஷேச தினங்கள் இல்லாததால் பட்டன் ரோஸ், செண்டுமல்லி விலை வீழ்ச்சி

ஓசூர், மார்ச் 6:  ஓசூரில், பட்டன் ரோஸ், செண்டுமல்லி பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள், வியாபாரிகள் கவலையடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, வேப்பனஹள்ளி ஆகிய பகுதிகளில், நல்ல மண் வளம் நிறைந்துள்ளது. இதனால் மழை இல்லாத நேரங்களில் சொட்டு நீர் பாசனம் மூலம் ஓசூர் பகுதியில் ேகரட், கோஸ், பீட்ரூட், கத்திரி காய், முள்ளங்கி மற்றும் மக்கசோளம், நெல், ராகி மற்றும் ரோஜா பூக்கள், செண்டுமல்லி, சம்பங்கி, சாமந்தி, மற்றும் கொய்மலர்கள் அதிகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மாதத்தில் இருந்தே செண்டுமல்லி, ரோஜா பூக்கள் அதிக விளைச்சலை கொடுத்துள்ளது. இதில் பட்டன் ரோஸ் தான் அதிகம் விளைச்சலை கொடுத்துள்ளது.

மாவட்டத்தின் மற்ற பகுதிகளை விட ஓசூர், தேன்கனிக்கோட்ைட, தளி, பாகலூர் மற்றும் மாலூர் பகுதியிலும் நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. இதனால் கர்நாடக மாநில விவசாயிகள், பூ வியாபாரிகள் ஓசூருக்கு வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர்.இந்நிலையில் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதாலும், பண்டிகை மற்றும் விசேஷ நிகழ்ச்சிகள் இல்லாததால் பூக்கள் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதில் பட்டன் ரோஸ் பூக்கள் தான் விலை மிகவும் குறைந்துள்ளது.
ஓசூர் பூ மார்கெட்டில் நாள் ஒன்றுக்கு சுமார்  டன் பூக்கள் விற்பனை நடப்பது வழக்கம். ஆனால், பண்டிகைகள், மூகூர்த்த நிகழ்ச்சிகள் குறைந்துள்ளதால் பூக்கள் விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது மல்லிப்பூ ஒரு கிலோ ₹200க்கும், கனகாமரம் ஒரு கிலோ ₹200க்கும், ஒரு கிலோ அரளிப்பூ ₹50 க்கும், ஒரு கிலோ ரோஸ் ₹10 முதல் 20க்கும், சாமந்தி ₹20 முதல் 30க்கும், ஒரு கிலோ சம்பங்கி ₹40 முதல் 50க்கும், செண்டு மல்லி பூ ஒரு கிலோ ₹5 முதல் 10க்கும் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
× RELATED கஞ்சா விற்ற 2 பேர் கைது